

புதுடெல்லி,
பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து நடந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசுவது தொடர்பாக குறிப்பிடப்பட்ட நாளில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. எனினும், பின்னர் அவர் நாடாளுமன்ற மேலவையில் அதற்கு பதிலளித்து பேசினார்.
அவர் மக்களவைக்கு வராதது பற்றி குறிப்பிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் முயற்சித்தனர் என திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார்.
இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என காங்கிரஸ் கட்சி மறுத்தது. இந்நிலையில், பிர்லாவுக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் கூறும்போது, நாங்கள் இன்று மதியம் 1.14 மணியளவில், 94சி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி, மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து ஓம் பிர்லாவை நீக்க கோரி நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தோம். இதில் மொத்தம் 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர் என கூறினார்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் சசி தரூர் எம்.பி. கூறும்போது, நம்பிக்கையில்லா தீர்மான விசயத்தில் கட்சிக்கு என்னுடைய ஆதரவை அளிக்கிறேன் என கூறினார். கட்சியின் உறுப்பினராக நான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றார்.
இந்த நிலையில், ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி, சபாநாயகரை பதவி நீக்க கோரும் மனுவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கையெழுத்திடுவது என்பது முறையல்ல என இதுபற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்கும்படி, அதனை அவையின் பொது செயலாளருக்கு ஓம் பிர்லா அனுப்பினார்.