மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா கடிதம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது
மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா கடிதம்
Published on

டெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்து வருகிறது.

இதனிடையே, அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியதாக கடந்த 3ம் தேதி மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து கடந்த 7ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இதுதொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கும் அவர் நேர்காணல்களை அளித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அரசியின் கொள்கை ரீதியிலான முடிவுகளை வர்த்தகத்துறை மந்திரி நாடாளுமன்றத்திற்கு வெளியே அறிவித்தது உரிமை மீறல் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவை சபாநாயகர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி மத்திய மந்திரி பியூஷ் கோயல் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சபாநாயகரிடம் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது கருத்தை தெரிவித்துவிட்டார்.

ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று திருச்சி சிவாவின் கடிதத்திற்கு மாநிலங்களவை சபாநாயகர் சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com