மனைவியை குத்திக்கொன்ற வழக்கில் அரசு ஊழியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மனைவியை குத்திக்கொன்ற வழக்கில் அரசு ஊழியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலை பள்ளிபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவர் கேரள அரசு படகு போக்குவரத்து துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அம்பிளி (27). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில், பணம் வசூல் செய்யும் முகவராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் மனைவியின் நடத்தையில் ராஜேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே அம்பிளி பணம் வசூலை முடித்து விட்டு வீடு நோக்கில் ஸ்கூட்டரில் பள்ளிபுரம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ், அம்பிளியை நடு ரோட்டில் வழிமறித்து திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.

பின்னர் வசூல் பணத்துடன் அங்கிருந்து தலைமறைவானார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த அம்பிளியை, அருகில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அம்பிளி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அம்பிளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், அம்பிளியின் உடலில் மார்பு உள்பட 17 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நடந்தது. இந்த கொலை தொடர்பாக சேர்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆலப்புழை கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாரதி, ராஜேஸை குற்றவாளி என அறிவித்தார். மேலும் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com