இந்தியா மற்றும் அமெரிக்கா உறவை பற்றிய டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன்: பிரதமர் மோடி


இந்தியா மற்றும் அமெரிக்கா உறவை பற்றிய டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன்:  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 6 Sept 2025 11:59 AM IST (Updated: 6 Sept 2025 12:00 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவும், அமெரிக்காவும் நேர்மறையான மற்றும் உலகளாவிய மூலோபாய நட்புறவை கொண்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா மீது வரிகளை விதித்தது. இதன்படி, 25 சதவீத கூடுதல் வரி உள்பட மொத்தம் 50 சதவீத வரியானது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என டிரம்ப் அரசு தெரிவித்தது.

இந்திய இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரி தொடர்பான நோட்டீஸ் ஒன்றையும் அமெரிக்கா பிறப்பித்தது. இந்த நடைமுறை கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கான அலுவல்பூர்வ அறிவிப்பு ஒன்றை டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்தது. இதன்படி, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும்.

அதுபற்றிய அறிவிப்பில், ரஷியாவால் அமெரிக்காவுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக புதிய வரிவிதிப்புகள் அமல்படுத்தப்படும். இந்த கொள்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு இந்த வரி விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 8,730 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும். இதனால், ஆடைகள், ரத்தினங்கள், நகைகள், கடல்சார் உணவு பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள் சார்ந்த துறைகள் கடுமையாக பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் காணப்படுகிறது.

இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், சீனாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். அவர் ஒரு சிறந்த பிரதமர். சில தருணங்களில் அவர் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் சிறப்பு வாய்ந்த உறவுகளை கொண்டுள்ளன.

இதுபற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவதுதான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன் என தெரிவித்துள்ளார். எனினும், இந்தியாவையும் ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம் என்றும் டிரம்ப் வருத்தம் வெளியிட்டார்.

டிரம்பின் இந்த பேச்சை வரவேற்கும் வகையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், இரு நாடுகளின் உறவை பற்றிய டிரம்பின் உணர்வுகளையும் மற்றும் நேர்மறையான மதிப்பீட்டையும் முழு அளவில் இந்தியா பிரதிபலிப்பதுடன் அவரை ஆழ்ந்து பாராட்டுகிறேன்.

இந்தியாவும், அமெரிக்காவும் நேர்மறையான மற்றும் முன்னோக்கி பயணிக்கும் விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய நட்புறவை கொண்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story