என்னுடைய திரை வாழ்வை அழிக்க முயற்சி நடைபெற்றது: விடுதலைக்கு பின் நடிகர் திலீப் பேட்டி

பிரபல மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில், போதிய ஆதாரம் இல்லை என்பதால் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம்,
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்குச் சென்ற போது, நடிகையை ஒரு கும்பல் கடத்தி ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்து அதனை விடியோ பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து கேரள காவல்துறை விசாரணை நடத்தி, நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.இதில், நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர்களும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். 8 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகு இன்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ் தீர்ப்பளித்தார். அதில், திலீப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவித்தார்.
வழக்கில் ஏ1 முதல் ஏ6 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான நடிகர் திலீப்பை விடுவித்துள்ளார். இந்த தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நடிகர் திலீப் கூறியதாவது; எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது. எனக்காக வாதிட்ட வழக்கறிஞர்கள், ஆதரவாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.






