“பீகார் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்..” - பிரசாந்த் கிஷோர்

நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக வரமாட்டார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. 14-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி, பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 12-ந்தேதி தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், இரு கட்சிகளும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மத்திய மந்திரி சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் 121 தொகுதிகளில் 17-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
இந்நிலையில், மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு, பா.ஜனதா நேற்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 71 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. அதில், 72 வயதான சபாநாயகர் நந்த கிஷோர் யாதவுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. அவர் 7 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். தனது மகனுக்கு சீட் கேட்டிருந்தார். ஆனால் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருப்பினும், கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்வதாக சமூக வலைத்தளத்தில் அவர் அறிவித்தார்.
துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, கடைசியாக 2010-ம் ஆண்டு பர்பட்டா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். தாராபூர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
எம்.எல்.சி.யாக இருக்கும் சுகாதாரம் மற்றும் சட்ட மந்திரி மங்கள் பாண்டே, சிவான் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் மத்திய மந்திரி ராம் கிருபால் யாதவுக்கு தானாபூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு துணை முதல்-மந்திரி விஜய்குமார் சின்ஹா, 3 தடவை வெற்றி பெற்ற லக்கிசாரை தொகுதியில் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். கலை மற்றும் கலாசாரத்துறை மந்திரி மோதிலால் பிரசாத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படவில்லை. அவர்களில் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஷ்ரேயாசி சிங் உள்பட 9 பேர் பெண்கள் ஆவர். அதே சமயத்தில், கட்சி தாவி வந்த சிலருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களான சிராக் பஸ்வான், உபேந்திர குஷ்வாகா ஆகியோரும் தொகுதி பங்கீட்டுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய மந்திரி ஜிதன்ராம் மஞ்சி, 6 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டதால் கட்சியில் அதிருப்தி நிலவுவதாக கூறியுள்ளார். இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்போம் என்று தெரிவித்தார்.
அதே சமயத்தில், எதிர்க்கட்சி கூட்டணியான மகா கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. இன்னும் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை இன்று காலை தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப்போவது இல்லை என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், “பீகார் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை. இம்முடிவு என் அரசியல் பயணத்தின் நன்மைக்காக எடுக்கப்பட்டது. இருப்பினும், ஜன் சுராஜ் கட்சி மூலம் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வேன். நாங்கள் நன்றாக வெற்றி பெறுவோம் அல்லது படுதோல்வி அடைவோம் என்று நான் உறுதியாகச் சொல்ல முடியும். 10 இடங்களுக்கும் குறைவான அல்லது 150 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று பதிவுகளில் கூறி வருகிறேன். இடையில் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.
முதல்-மந்திரி நிதிஷ் குமார் கட்சியின் எதிர்காலம் மோசமடைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெளியேறும் பாதையில் உள்ளது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரியாக வரமாட்டார்” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.






