இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப் இந்த ஆண்டு வெளியிடப்படும் - மத்திய மந்திரி தகவல்

6 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப் இந்த ஆண்டு வெளியிடப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தின் 85-வது நிறுவன தின விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
உலகளவில் செமி கண்டக்டர் துறையில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க வீரராக மாறத் தயாராக உள்ளது. மிகவும் சிக்கலான சில சிப்கள் இன்று ஐதராபாத், பெங்களூரு, புனே, குருகிராம் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்போது, செமிகண்டக்டர் சிப்களின் உற்பத்தியை நாம் தொடங்குகிறோம். ஏற்கனவே 6 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். அவற்றின் கட்டுமானம் நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் சிப் நம்மிடம் இருக்கும்.
இந்திய செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் ஒரு பகுதியாக, இலவச தரவுத்தொகுப்புகள் மற்றும் பிற பதிவேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் ஒரு மில்லியன் பேர் வரை பயிற்சி பெற்று வருகின்றனர். 2047-ம் ஆண்டுக்குள் உலகின் முதல் இரண்டு பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இருக்கும். உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மேற்கத்திய நாடுகள் இப்போது கிழக்கு நாடுகளால் மாற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.






