ஜோத்பூர் வன்முறை: மே 8 நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

ஜோத்பூர் வன்முறையை முன்னிட்டு மே 8-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கோப்புப் படம் ANI
கோப்புப் படம் ANI
Published on

ஜோத்பூர்,

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, மதம் சார்ந்த கொடிகளை ஏற்றிய நிலையில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து நடந்த கல்வீச்சு தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்தனர்.

தொடர்ந்து சமூக வலை தளங்களில் வதந்திகள் பரவியதன் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது.

மக்கள் அமைதியையும், நல்லிணக்கமும் காக்க வேண்டும் என முதல்-மந்திரி கேட்டு கொண்டார். இதன் ஒரு பகுதியாக ஜோத்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவை மே 8 நள்ளிரவு வரை நீட்டித்து மாவட்ட காவல் ஆணையாளர் இன்று உத்தரவிட்டு உள்ளார்.

எனினும், ரைகாபா பேலஸ் பேருந்து நிறுத்தம் மற்றும் ரைகாபா ரெயில்வே நிலையம் இதில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு செல்ல கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று மருத்துவ சேவை, வங்கி அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் ஊடக பணியாளர்களுக்கு விலக்களிக்கப்பட்டு உள்ளது. செய்தித்தாள் விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட உதவி காவல்துறை ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஊரடங்கு உத்தரவின் போது வெளியே செல்ல அனுமதி வழங்க முடியும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையை அடுத்து இதுவரை 211 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஜோத்பூரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாகவும் டி.ஜி.பி. லாதர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com