

திருவனந்தபுரம்,
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 1-ந்தேதியன்று தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
இதில், மத்திய அரசின் அமைச்சகங்களிலேயே பாதுகாப்பு அமைச்சகத்திற்குதான் அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், மத்திய பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு என்று எதுவுமில்லை என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறையாக கூறினார்.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் கேரளா கடுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது என ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது. இதனை முன்னிட்டு, மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு ஆளுங்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று (3-ந்தேதி) அனைத்து பூத்களிலும் கருப்பு கொடிகள் பறக்க விடப்படும். மக்கள் விரோத மத்திய பட்ஜெட் என குற்றம் சாட்டியுள்ள அக்கட்சி, ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.