நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து முக அழகிரி மேல் முறையீடு செய்தார்.
டெல்லி,
நில அபகரிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரையில் உள்ள ஒரு கோவில் நிலம் தொடர்பான 2014 ஆம் ஆண்டு நில அபகரிப்பு வழக்கில் அழகிரியின் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து, விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டிருந்தது. மதுரையில் உள்ள சிவரக்கோட்டையில் எம்.கே. அழகிரி கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ஒரு பொறியியல் கல்லூரிக்காக நிலம அபகரிப்பு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலம் விநாயகர் கோவிலுக்கு சொந்தமானது என குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அதிமுக ஆட்சிக் காலத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மதுரை விசாரணை நீதிமன்றம் அழகிரியை 2021 -ம் ஆண்டில் ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் மோசடி பத்திரங்களைச் செயல்படுத்துதல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது. இருப்பினும், குற்றச் சதி மற்றும் குற்றவியல் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் மு.க. அழகிரி வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இதனையடுத்து, நில அபகரிப்பு எதிர்ப்புப் பிரிவு ,பகுதி குற்றச்சாட்டுகளிலிருந்து மு.க. அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஒரு மனுவை தாக்கல் செய்தது.
உந்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி. வேல்முருகன் கடந்த மார்ச் 4ம் தேதி விசாரித்து, மு.க.அழகிரி அனைத்து குற்றச்சாட்டுகளையும் வழக்கில் எதிர்கொள்ள உத்தரவிட்டதோடு, வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற மு.க.அழகிரியின் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து மு.க.அழகிரி சார்பில் கடந்த 20.08.2025 அன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்
இந்த விவகாரத்தில் நீங்கள் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை ஏன் சந்திக்கக் கூடாது அங்கேயே செல்லலாமே? என தெரிவித்து ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு இந்த விவகாரத்தில் சரியான கருத்தையே தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது, அதன் அடிப்படையில் நாங்கள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட விரும்பவில்லை" எனக்கூறி மு.க.அழகிரி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






