மராட்டியம்: லால்பாக் ராஜா விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஆனந்த் அம்பானி பங்கேற்பு

விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக ஏறக்குறைய 21 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை,
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மும்பையில் 10 நாட்கள் விசேஷம் நடைபெறுவது வழக்கம். இதன்படி, ஆனந்த சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் கொண்டாட்டங்கள் நேற்று இரவு வரை நீடித்தன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு குழுவினர் மற்றும் அந்தந்த பகுதி சங்கங்கள் சார்பிலும் பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர். இதேபோல் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.
பின்னர் அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. முதல் நாளில் இருந்தே சிலைகள் கரைக்கப்பட்டன. இந்நிலையில் மும்பையில் பல்வேறு இடங்களிலும் நேற்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அந்த வகையில் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்காவன் சவுபத்திக்கு கொண்டு வரப்பட்டன.
லால்பாக் ராஜா, சிந்தாமணி விநாயகர், பரேல்ச்சா ராஜா போன்ற பிரசித்தி பெற்ற மண்டல்களின் விநாயகர் சிலைகள், பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரமாண்ட சிலைகள், மக்கள் வெள்ளத்துக்கு நடுவே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மும்பையில் வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒன்றே முக்கால் லட்சம் சிலைகள், மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 6 ஆயிரத்து 500 சிலைகள் செயற்கை குளங்கள், கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. பொதுமக்கள் சிலைகளை கரைக்க 360 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதேபோன்று, மராட்டியத்தின் மும்பை நகரில் பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா மண்டல்களின் விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்காக தெருவில் ஊர்வலம் சென்றபோது, ஆயிரக்கணக்கானோர் கணபதி பாப்பா மோரியா என பக்தி கோஷம் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குநர் ஆனந்த் அம்பானியும் கலந்து கொண்டார்.
ஆனந்த சதுர்த்தியையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட சுமார் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. மேலும் டிரோன்கள் மூலமாகவும் சிலை ஊர்வலங்கள் கண்காணிக்கப்பட்டன. ஏறக்குறைய 21 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






