அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்: ராகுல் காந்தி

ஜவுளித் தொழிலும், பருத்தி விவசாயமும் இந்தியாவில் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாகும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்: ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் ஜவுளித் தொழிலும், பருத்தி விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

“18 சதவீத வரி – 0 சதவீதம். இந்த விஷயத்தில் நிபுணத்துவம் பெற்ற பிரதமரும், அவரது அமைச்சரவை சகாக்களும் எவ்வாறு குழப்பத்தை பரப்புகிறார்கள் என்பதை விளக்குகிறேன். இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவின் பருத்தி விவசாயிகளையும், ஜவுளி ஏற்றுமதியாளர்களையும் அவர்கள் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள்?அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதியில் வங்காளதேசத்திற்கு 0 சதவீத வரிச்சலுகை வழங்கப்படுகிறது. ஒரே நிபந்தனை – அவர்கள் அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும்.

இந்திய ஆடைகளுக்கு 18 சதவீத வரி அறிவிக்கப்பட்ட பிறகு, வங்காளதேசத்திற்கு வழங்கப்படும் சிறப்பு சலுகை குறித்து நான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, மோடி அரசாங்கத்தின் ஒரு மந்திரி, ‘நாங்களும் அதே நன்மையை விரும்பினால், அமெரிக்காவில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும்’ என்று பதிலளித்தார்.இந்த உண்மை இதுவரை ஏன் மறைக்கப்பட்டது? இது என்ன வகையான கொள்கை? இது உண்மையில் ஏதேனும் ஒரு தேர்வா? அல்லது ‘முன்னால் கிணறு, பின்னால் பள்ளம்’ என்ற சூழ்நிலைக்குள் நம்மைத் தள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு பொறியா?அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்தால், நமது விவசாயிகள் அழிந்து போவார்கள். அதை இறக்குமதி செய்யாவிட்டால், நமது ஜவுளித் தொழில் பின்தங்கி அழிந்துவிடும்.

இப்போது வங்காளதேசமும் இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதியை குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம் என்பதற்கான சிக்னல்களை வழங்கி வருகிறது.ஜவுளித் தொழிலும், பருத்தி விவசாயமும் இந்தியாவில் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாகும். கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணவு இந்தத் துறைகளைச் சார்ந்துள்ளது. இந்தத் துறைகளை தாக்குவது என்பது லட்சக்கணக்கான குடும்பங்களை வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடியின் குழியில் தள்ளுவதாகும்.

தேசிய நலனில் சிந்திக்கும் ஒரு தொலைநோக்கு அரசு, பருத்தி விவசாயிகளையும் ஜவுளி ஏற்றுமதியாளர்களையும் பாதுகாத்து உறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் சரணடைந்து, இரு துறைகளுக்கும் மிகவும் மோசமான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளனர்.இவ்வாறு ராகுல் காந்தி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com