மேகாலயா: 8 பேர் புதிதாக மந்திரிகளாக பதவியேற்பு

கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.
ஷில்லாங்,
மேகாலயாவில் என்.பி.பி. கட்சி தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணியை அமைத்து முதல்-மந்திரி கன்ராட் கே சங்மா ஆட்சி செய்து வருகிறார். 60 பேர் கொண்ட மேகாலயா சட்டசபையில், அதிகபட்சம் 12 பேரே மந்திரிகளாக பதவி வகிக்க முடியும். முதல்-மந்திரி உள்பட 12 மந்திரிகளுக்கு மேல் பதவி வகிப்பதற்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில், தன்னுடைய அரசின் மந்திரி சபையில் மாற்றங்களை மேற்கொள்ள முதல்-மந்திரி முடிவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு, அம்பரீன் லிங்டோ, கமிங்கோன் யம்போன், ரக்கம் சங்மா மற்றும் என்.பி.பி.யின் அபு தாஹிர் மொண்டல், யு.டி.பி.யின் பால் லிங்டோ மற்றும் கிர்மென் ஷில்லா, எச்.எஸ்.பி.டி.பி.யின் ஷக்லியார் வார்ஜ்ரி மற்றும் பா.ஜ.க.வின் ஏ.எல். ஹெக் ஆகிய 8 மந்திரிகள் இன்று ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், கவர்னர் மாளிகையில் கவர்னர் விஜயசங்கரை முதல்-மந்திரி கன்ராட் கே சங்மா நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மந்திரிகளின் ராஜினாமா கடிதங்களை வழங்கினார். இதனை அடுத்து, புதிய மந்திரிகளின் பதவியேற்பு விழா இன்று கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
இதன்படி, என்.பி.பி. கட்சியின் திமோதி டி ஷிரா, பா.ஜ.க.வின் சன்போர் ஷுல்லாய், யு.டி.பி.யின் மெத்பா லிங்டோ, வைலாத்மிகி ஷில்லா, சோஸ்தெனஸ் சோதுன், என்.பி.பி. கட்சியின் பிரெனிங் சங்மா, எச்.எஸ்.பி.டி.பி.யின் மெத்தடியஸ் கார் மற்றும் யு.டி.பி.யின் லக்மென் ரிம்புய் ஆகியோர் கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முறைப்படி இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.






