ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் - பிரதமர் மோடி பதிலுரை இன்றி மக்களவையில் நிறைவேற்றம்

மாநிலங்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் -  பிரதமர் மோடி பதிலுரை இன்றி மக்களவையில் நிறைவேற்றம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-ந் தேதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி பேசும்போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களை சுட்டிக்காட்ட விரும்பினார்.

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களாக மக்களவையில் கடும் அமளி நீடித்து வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மோடி பதிலுரை ஆற்றவில்லை.

இந்த நிலையில், இன்று காலையும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது. அமளிக்கு மத்தியில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு நடத்தி அவைத் தலைவர் ஓம் பிர்லா நிறைவேற்றினார்.

தொடர்ந்து மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றவுள்ளார். கடைசியாக 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பிரதமரின் பதிலுரை இல்லாமலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com