அனில் அம்பானி மீது 3 வங்கிகள் எடுத்த நடவடிக்கைக்கு மும்பை ஐகோர்ட்டு தடை

அனில் அம்பானியின் வங்கிக்கணக்கை மோசடி என அறிவித்து 3 வங்கிகள் எடுத்த நடவடிக்கைக்கு மும்பை ஐகோர்ட்டு தடை விதித்தது.
மும்பை,
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ‘எஸ்' வங்கி ₹3 ஆயிரம் கோடி கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ₹17 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த 2 அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில் அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கணக்குகள் மோசடி கணக்குகள் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் அறிவிப்புகளை வெளியிட்டன. இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் அனில் அம்பானி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 வங்கிகள் எடுத்த நடவடிக்கைக்கு மும்பை ஐகோர்ட்டு தடை விதித்தது. ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் மீறப்பட்டுள்ளது. அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படாவிட்டால், அது கடுமையான மற்றும் சரிசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். என்று கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியுள்ளது.






