

மும்பை,
மராட்டியத்தில் பாஜக- சிவசேனா கூட்டணி முறிந்ததால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்த சிவசேனா, ஆட்சி அமைக்க தீவிரம் காட்டியது. இதற்கு மத்தியில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சரத்பவார் அண்ணன் மகனுமான அஜித் பவார், திடீரென பாஜகவுடன் கைகோர்த்தார். இதையடுத்து, சனிக்கிழமை காலை, முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல் மந்திரியாக அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர்.
ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுத்த கவர்னருக்கு எதிராகவும், தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தியும் சிவசேனா கூட்டணியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக, துணை முதல் மந்திரி பதவியில் இருந்து அஜித் பவார் நேற்று மாலை பதவி விலகினார். தொடர்ந்து தேவேந்திர பட்னாவிசும் பதவி விலகினார். அஜித் பவார் விலகியதால், பெரும்பான்மை தங்களுக்கு இல்லை என்பதாகவும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே மரட்டியத்தின் அடுத்த முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் நாளை முதல் மந்திரியாக உத்தவ் தாக்ரே பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பதற்காக இன்று அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் கூடியது. இதில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்றனர். உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கெலம்ப்கர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
மராட்டியத்தில் சட்டசபை தேர்தலை தொடர்ந்து, ஆட்சி அமையாமல் நிலவிய அரசியல் குழப்பம் காரணமாக புதிய சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட 288 எம்.எல். ஏ.க்கள், ஏறத்தாழ ஒருமாதத்திற்கு பிறகு இன்று பதவியேற்றுள்ளனர்.