திருப்பதியில் லட்டு வாங்க நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய வசதி அறிமுகம்


திருப்பதியில் லட்டு வாங்க நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய வசதி அறிமுகம்
x
தினத்தந்தி 24 Jun 2025 11:03 AM IST (Updated: 24 Jun 2025 2:17 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வாங்க பக்தர்கள் இனி நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் இலவச தரிசனத்தில் கிட்டத்தட்ட 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். சாமி தரிசனம் செய்வதற்கு வரிசையில் காத்திருப்பது மட்டுமின்றி, பிரசாதமாக வழங்கப்படும் லட்டினை வாங்குவதற்கும் சில சமயங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. பெரும்பாலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் லட்டு வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பதியில் லட்டு வாங்க பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது லட்டு டோக்கன் பெற க்யூஆர் கோடு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பிரத்யேக எந்திரத்தில் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து விரைவாக பணம் செலுத்தி லட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டச் ஸ்கீரினுடன் கூடிய இந்த பிரத்யேக எந்திரத்தில், தரிசன டிக்கெட் எண், எத்தனை லட்டு தேவை, மொபைல் எண்ணை உள்ளீடாக வழங்க வேண்டும். திரையில் தோன்றும் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து, நாம் லட்டுக்கான பணத்தை யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்தலாம். பின்னர், அந்த டோக்கனை கவுண்டரில் வழங்கி லட்டுகளை பெற முடியும்.

மேலும், தரிசன டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்களும் லட்டு பெறும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story