மாரத்தான் வீரர் பவுஜா சிங் பலியான விவகாரம்: விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியவர் கைது

பவுஜா சிங் மீது கார் ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் அம்ரித்பால் சிங் தில்லான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமிர்தசரஸ்,
பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங். பியாஸ் கிராமத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் வெளியிட்டு இருந்தனர்.
பவுஜா சிங் மீது கார் ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் அம்ரித்பால் சிங் தில்லான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார். அவரது சொந்த ஊரான கர்தார்பூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். அண்மையில் தான் கனடாவில் இருந்து சொந்த ஊருக்கு தில்லான் திரும்பி இருந்தார். விபத்து நடைபெற்ற பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போது விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் பதிவு எண்ணையும் அடையாளம் கண்டனர். இதன் அடிப்படையில் தில்லான் கைது செய்யப்பட்டார்.
பவுஜா சிங் மீது காரை ஏற்றியதையும் தில்லான் ஒப்புக்கொண்டுள்ளார். தில்லானுக்கு மூன்று சகோதரிகள் இருப்பதாகவும், அவரது தாயார் கனடாவில் வசிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். பிஎன்எஸ் பிரிவுகள் 281 கீழ் பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் 105 கீழ் கொலை வழக்கு ஆகியவற்றில் தில்லான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்






