

புதுடெல்லி,
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருந்தும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாகக் அதிகரித்து வருகிறது.
டெல்லியில் 1767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா நோய்க்கு 42 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது வரை 14,793 பேருக்கு கொரேனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 488 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,323 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
டெல்லியில் இன்று காலை வரை 1767 பேருக்கு கொரோனா பாதித்துள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறினார். மேலும் கொரோனா பாதித்த 911 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 27 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில், கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.. சோதனை செய்யப்பட்ட 2274 க்கும் மேற்பட்ட மாதிரிகளில் 67 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைக் கவனிக்கும் எந்தவொரு மருத்துவர், செவிலியர், துப்புரவு பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றோர் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தால், டெல்லி அரசு அவர்களது குடும்பத்துக்கு ரூ .1 கோடி இழப்பீடு வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.