ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் - போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற வாலிபரை 24 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஸ்ரீராமபுரம்,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீராமபுரம் சுதந்திர பாளையாவில் வசித்து வருபவர் கோபால். இவரது மகள் யாமினி பிரியா (வயது 20). இவர் பனசங்கரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி பார்ம் படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற யாமினி தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பினார். மல்லேசுவரம் மந்த்ரி வணிகவளாகம் பின்புறம் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே வந்த போது அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து தகராறு செய்ததுடன், அவரது கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீராமபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலிக்க மறுத்த விவகாரத்தில் யாமினியை, அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த விக்னேஷ் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து மாணவி யாமினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
நேற்று காலை பிரேத பரிசோதனை செய்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் யாமினியின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதது கல்நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் யாமினியின் உடல் சுதந்திரபாளையாவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி இறுதிச்சடங்கு நடத்தினர். நேற்று மாலை 6 மணி அளவில் அங்குள்ள அரிசந்திரகாட் மயானத்தில் யாமினியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி சுதந்திர பாளையா பகுதியில் 2-வது நாளாக நேற்றும் பெரும் சோகமும், பரபரப்பும் நிலவியது.
இதற்கிடையே விக்னேஷ் பற்றி போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. விக்னேஷ் கொரோனா காலக்கட்டத்தில் மாநகராட்சி மார்ஷல் போல் நடித்து பலரிடம் பணம் பறித்த புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் யாமினியை கொடூரமாக கொன்ற விக்னேசை பிடிக்க போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சோழதேவனஹள்ளியில் உள்ள ஒருவரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று மதியம் அங்கு விரைந்து சென்று, விக்னேசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொலை சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் போலீசார் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் காதலிக்க மறுத்ததால் யாமினியை கொன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே விக்னேசுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்தவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.






