

புதுடெல்லி,
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. நேற்று முதல் கட்ட அமர்வு முடிவடைந்தது. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் மார்ச் 9-ந் தேதி கூடுகின்றன.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது ஏற்பட்ட அமளியால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பிரதமர் மோடியை பெண் எம்.பி.க்கள் தாக்க திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியிருந்தார்.இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் அளித்தனர்.
இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய தீர்மான நோட்டீஸ் அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் முன்வைத்துள்ளது. மற்ற எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவாக இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகரை நீக்கும் தீர்மான நோட்டீஸில் திரிணாமுல் காங்கிரஸ் கையெழுத்திடவில்லை. ஆனால் அந்தக் கட்சியின் கோரிக்கையை கொள்கை அளவில் இந்தியா கூட்டணி ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு வழங்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் நோட்டீஸை எதிர்க்கட்சிகள் அளித்துள்ளன. தற்போது தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தையும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆளும் பா.ஜனதா மற்றும் இந்தியா கூட்டணி இடையே மோதல் அதிகரித்துள்ளது.