பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க இந்திய- அமெரிக்க வெளியுறவு மந்திரிகள் வலியுறுத்தல்

தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய-அமெரிக்க வெளியுறவு மந்திரிகள் வலியுறுத்தினர்.
பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க இந்திய- அமெரிக்க வெளியுறவு மந்திரிகள் வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் ஆசிய நாடுகளில் ஒருவார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு வந்த அவர், அதிபர் அஷ்ரப் கனியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு சென்றார். இதைத் தொடர்ந்து 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டில்லர்சன் இந்தியாவுக்கு வந்தார். அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.

நேற்று அவர் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை டெல்லியில் சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது இரு நாடுகள் இடையேயும் உறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

உறுதியான நடவடிக்கை

பின்னர் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக பாகிஸ்தான் நடந்து கொள்வது குறித்து இரு தரப்பிலும் மிகுந்த கவலையும் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு, ஆதரவு, புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் கைவிடவேண்டும். தனது மண்ணில் இருந்தவாறு பக்கத்து நாடுகளில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இப்பிராந்தியத்தில் குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பும், அமைதியான சூழலும் நிலவுவதை உறுதி செய்ய முடியும் என வலியுறுத்தப்பட்டது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த சந்திப்புக்கு பின்னர் சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொறுப்பேற்கவேண்டும்

நானும் அமெரிக்க வெளியுறவு மந்திரியும் நடத்திய பேச்சுவார்த்தையில் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் எந்தவொரு நாடும் அதற்கு பொறுப்பேற்கவேண்டும் என்பதை வலியுறுத்தினோம். பயங்கரவாதிகளுடன் கொண்டுள்ள உறவை பாகிஸ்தான் முற்றிலுமாக துண்டித்துக் கொள்ளவேண்டும் என்று இந்த சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவு மந்திரியிடம் வலியுறுத்தினேன். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆசிய நாடுகளின் மீதான அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் புதிய கொள்கைகள் எந்த பலனையும் அளிக்காது என்பதையும் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

எச்1 பி விசா (அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசா) பிரச்சினை குறித்தும் டில்லர்சனிடம் பேசினேன். அப்போது, இந்த விவகாரத்தில் இந்தியர்கள் யாரும் பாதிக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று அவரிடம் வலியுறுத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தோளோடு தோள் கொடுப்போம்

டில்லர்சன் கூறும்போது, எனது பாகிஸ்தான் பயணத்தின்போதே தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். பிரதமர் மோடியின் வார்த்தைகளின்படி சொல்லவேண்டும் என்றால் அமெரிக்காவும், இந்தியாவும் இயல்பான கூட்டணி நாடுகள். மோடியின் நட்பையும், நெருங்கிய உறவு தொடர்பான அவருடைய பார்வையையும் பாராட்டுகிறேன். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க தோளோடு தோள் கொடுக்கும் என்றார்.

மேலும், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் அந்த நாட்டின் ஸ்திரத்தன்மைக்கே அச்சுறுத்தல் ஏற்படும். பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதை ஏற்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறோம். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இந்தோ-பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவும் இந்தியாவும் இன்னும் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமருடன் சந்திப்பு

இதைத்தொடர்ந்து டில்லர்சன் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை மோடி தனது டுவிட்டர் பதிவிலும் வெளியிட்டார். அதில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணைக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக நேற்று காலை 11 மணி அளவில் டில்லர்சன், டெல்லி பிர்லா இல்லத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு காந்தி தங்கி யிருந்த அறையையும் அவர் பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com