டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 3-ந்தேதி மூத்த மந்திரிகள் கூட்டம் : மந்திரி சபையில் மாற்றமா?

டெல்லியில் வருகிற 3-ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் மூத்த மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பல கட்டங்களாக நடந்த இந்த கூட்டங்களில் கட்சியின் அமைப்பு தொடர்பாகவும், நடப்பு அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

பிரதமர் மோடி ஆலோசனை

இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியும் நேற்று முன்தினம் உயர்மட்ட ஆலோசனைகளை நடத்தினார். குறிப்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோருடன் அடுத்தடுத்து இந்த ஆலோசனைகள் நடந்தது.

இந்த கூட்டங்களில் பா.ஜனதா தலைவர் ஜ.பி.நட்டாவும் பங்கேற்றுள்ளதால், கட்சியிலும், ஆட்சியிலும் விரைவில் மாற்றங்கள் இருக்கும் என யூகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக மத்திய மந்திரி சபையிலும், கட்சியில் மாநில அளவிலும் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மூத்த மத்திய மந்திரிகள் கூட்டம் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்

அங்குள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மாநாட்டு அரங்கில் இந்த கூட்டம் நடக்கிறது. இதன் மூலம் மந்திரி சபை மாற்றம் குறித்த யூகங்கள் மேலும் வலுப்பெற்று உள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த மந்திரி சபை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com