வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாநிலங்கள்; சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

கடினமான காலங்களில் பிரதமரின் கவனமும், மத்திய அரசின் உதவியும் அவசியமானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் வடமாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இமாசல பிரதேசத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. சுமார் ஆயிரம் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.
சிம்லாவில் தொடர் மழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளை நிலங்கள் நீரில் மூழ்கின. பஞ்சாப் மாநிலத்தில் 1988-க்கு பிறகு இந்த ஆண்டு அதிக கனமழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சட்லெஜ் மற்றும் ரவி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாநிலங்களுக்கு பிரதமர் மோடி சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“பஞ்சாப்பில் வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர், இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமையும் மிகவும் கவலையளிக்கிறது. இதுபோன்ற கடினமான காலங்களில் பிரதமரின் கவனமும், மத்திய அரசின் உதவியும் மிகவும் அவசியம். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள், உயிர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர்.
இந்த மாநிலங்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு, உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற போராடுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






