கன்னடம் தெரியுமா? எனக் கேட்ட சித்தராமையா... சிரித்தபடி பதிலளித்த திரவுபதி முர்மு


கன்னடம் தெரியுமா? எனக் கேட்ட சித்தராமையா... சிரித்தபடி பதிலளித்த திரவுபதி முர்மு
x

நான் கன்னடம் உள்பட அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு டவுனில் அமைந்திருக்கும் மத்திய அரசுக்கு சொந்தமான பேச்சு மற்றும் கேட்கும் திறன் மருத்துவமனையின் 60-ம் ஆண்டு வைர விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்துக்கு வந்தார்.

விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு காரில் நேராக பேச்சு மற்றும் கேட்கும் திறன் மருத்துவமனைக்கு சென்றார். அங்குள்ள அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவமனையின் 60-ம் ஆண்டு வைர விழாவில் அவர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

முன்னதாக வரவேற்பு உரையின்போது கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா “​​உங்களுக்கு (திரவுபதி முர்மு) கன்னட மொழி தெரியுமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அதற்கு ஜனாதிபதி முர்முவும் சிரித்துக் கொண்டே, "இல்லை, ஆனால் நான் அதைக் கற்றுக்கொள்ள முயற்சிப்பேன்" என்று கூறினார். ஜனாதிபதி - சித்தராமையா இடையே நடந்த உரையாடல் விழாவில் சிறிது நேரம் கலகலப்பாக அமைந்தது.

அதனை தொடர்ந்து பின்னர் திரவுபதி முர்மு விழாவில் பேசியதாவது:-

நான் நாட்டில் உள்ள அனைத்து மொழிகள், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுக்கு ஆழ்ந்த மரியாதை கொடுப்பவள். நான் கன்னடம் கற்க ஈடுபாட்டுடன் ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக எனது முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். நான் இங்கு மேடையில் வீற்றிருக்கும் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

கன்னட மொழி என் தாய் மொழி கிடையாது. இருப்பினும் நான் கன்னடம் உள்பட அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள். நாட்டில் உள்ள அனைவரும் தங்களது மொழி, கலாசாரம், பண்பாட்டை காத்திட பாடுபட வேண்டும். அதை நல்வழியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சிறிது, சிறிதாக நான் கன்னடம் கற்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story