படுக்கையில் பாம்பு சட்டை, திருமணத்திற்கு முன்... நாகினியாக மாறிய இளம்பெண்; அதிர்ந்து போன பெற்றோர்

இளம்பெண்ணின் மொபைல் போன் தகவல்களை கொண்டு அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
படுக்கையில் பாம்பு சட்டை, திருமணத்திற்கு முன்... நாகினியாக மாறிய இளம்பெண்; அதிர்ந்து போன பெற்றோர்
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் ஆரையா மாவட்டத்தில் பாபுந்த் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், காலையில் இளம்பெண்ணின் அறைக்கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால், பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கதவை திறந்த பார்த்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில் பெண்ணுக்கு பதிலாக 5 அடி நீளத்திற்கு பாம்பு கழற்றி போட்டிருந்த சட்டை இருந்துள்ளது. உண்மையில் அந்த இளம்பெண் இரவோரு இரவாக, காதலருடன் ஓடி விட்டார்.

Also Read
வங்காளதேசத்தில் அட்டூழியம்; இந்து தொழிலதிபரை படுகொலை செய்த மர்ம கும்பல்
படுக்கையில் பாம்பு சட்டை, திருமணத்திற்கு முன்... நாகினியாக மாறிய இளம்பெண்; அதிர்ந்து போன பெற்றோர்

அதற்கு முன், தன்னுடைய படுக்கையில் பாம்பு சட்டை, வளையல்கள் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை போட்டு விட்டு சென்றுள்ளார். இதனை பார்த்த அவரின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

ஆனால், அந்த பெண் ஒரு நாகினியாக மாறி விட்டார் என ஊருக்குள் தகவல்கள் பரவின. அந்த பெண்ணுக்கு தனித்த சக்தி இருக்கிறது என்றும் அரிய பெரும் ஆற்றல் உள்ளது என்றும் சிலர் கூறினர். அதனால், மனித வடிவை விட்டு விட்டு பாம்பாக உருமாறி விட்டார் என புரளியை பரப்பினர்.

இதுவரை அந்த இளம்பெண்ணுடன் பழகியவர்கள் பயந்து போனார்கள். அந்த வீட்டின் அருகே செல்லவே பயந்தனர். பெண்கள் பலரும் தங்களுடைய வீடுகளில் சாமியை வேண்டி கொள்ள துவங்கினர். குழந்தைகளும் கூட விசயம் அறிந்து அச்சமடைந்தன. இது மந்திர, தந்திரமா? சூனியமா? அதிசயமா? என யாராலும் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை.

பெற்றோர் அளித்த தகவலை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டுக்கு வந்தனர். தொடக்கத்தில் எச்சரிக்கையுடன் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், அந்த பெண் போராடியதற்கான தடயமோ அல்லது வேறு எந்த சம்பவத்திற்கான அறிகுறியோ தெரிய வரவில்லை. வீட்டுக்கு வெளியேயும் அதுபோன்று எதுவும் இல்லை. இதன்பின்னர் இளம்பெண்ணின் மொபைல் போனை கைப்பற்றி, ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அதில், அந்த கிராமத்தில் இளைஞன் ஒருவருடன் அந்த இளம்பெண்ணுக்கு காதல் ஏற்பட்டு உள்ளது. நீண்ட காலத்திற்கு இருவரும், ஒன்றாக பல இடங்களில் சுற்றி திரிந்தும் வந்துள்ளனர். அவர்களின் காதலை தெரிந்து, குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்தனர்.

இந்த சூழலிலேயே காதலனுடன் அந்த இளம்பெண் தப்பியோடி உள்ளார். யாருக்கும் சந்தேகம் வர கூடாது என்பதற்காக அவர் அரங்கேற்றிய நாடகமும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுபற்றி பாபுந்த் காவல் நிலைய உயரதிகாரி அஜய் குமார் கூறும்போது, இது ஒரு மர்ம சம்பவம் அல்ல.

திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம். இளம்பெண்ணின் மொபைல் போன் தகவல்களை கொண்டு அவரை தேடும் பணி நடந்து வருகிறது. அவர் நாகினியாக மாறி விட்டார் என்பது முற்றிலும் அடிப்படையற்ற தகவல் என கூறினார். எனினும், அந்த கிராமத்தில் அச்சத்துடனேயே அந்த வீட்டை கடந்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com