100 நாள் வேலை திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீட்டை குறைக்க மத்திய அரசு திட்டம்

ஊரக வேலைத் திட்ட பணி நாட்களாக 125 நாட்களாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி,
வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீட்டை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 90% நிதியை மத்திய அரசு வழங்கிவரும் நிலையில் 60%-ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நிதி பங்களிப்பு 10%இல் இருந்து 40%ஆக உயர்வதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
100 நாள் வேலைக்கான பணிகளை தேர்வு செய்வதற்கான வரைமுறையை மத்திய அரசு முடிவுசெய்யும் எனவும் மத்திய அரசின் வரைமுறைகளுக்கு உட்பட்டே மாநில அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளன. மேலும் விவசாய அறுவடை காலத்தில் 60 நாட்களுக்கு ஊரக வேலைத் திட்டத்தில் பணிகளைக் குறைக்கக் கூடாது எனவும் ஊரக வேலைத் திட்ட பணி நாட்களாக 125 நாட்களாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.






