கவர்னர்கள் விவகாரம்; ஜனாதிபதியின் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க சுப்ரீ்ம் கோர்ட்டு உத்தரவு


கவர்னர்கள் விவகாரம்; ஜனாதிபதியின் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க சுப்ரீ்ம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 July 2025 11:18 AM IST (Updated: 22 July 2025 11:28 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என சுப்ரீ்ம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி நீண்டகாலம் கிடப்பில் போட்டு இருந்தார். இதனால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

அதன்படி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர் ஒரு மாதத்துக்குள்ளும், கவர்னர் அனுப்பிவைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்தது.

மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ், கவர்னருக்கு தனியுரிமை கிடையாது என்றும், மந்திரி சபையின் ஆலோசனையின்பேரில் கவர்னர் செயல்பட வேண்டும் என்றும் கூறியது.

கவர்னர் அனுப்பிவைத்த மசோதா மீது ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டால், மாநில அரசுகள் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மசோதா மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயித்தது இதுவே முதல்முறை ஆகும்.

இதற்கிடையே இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனக்குரிய சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி, சுப்ரீம் கோர்ட்டுக்கு 14 கேள்விகளை விடுத்திருந்தார். ஜனாதிபதி எழுப்பியிருந்த 14 கேள்விகள் விவரம்,

1. ஒரு மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு வரும்போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் அவருக்கு இருக்கும் சட்டரீதியான வாய்ப்புகள் என்ன?.

2. அவ்வாறு ஒரு மசோதா அனுப்பப்பட்டு, தனக்குரிய அனைத்து வாய்ப்புகளையும் கவர்னர் பயன்படுத்தும்போது, மந்திரிசபையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?.

3. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், கவர்னரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.

4. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ் கவர்னரின் செயல்பாடுகள் தொடர்பாக கோர்ட்டு விசாரிக்க, அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு தடையாக உள்ளதா?.

5. கவர்னரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.

6. அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின்கீழ், ஜனாதிபதியின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.

7. ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.

8. ஜனாதிபதியின் அனுமதிக்காக கவர்னர் மசோதாவை அனுப்பி வைக்கும்போது, அரசியல் சாசனத்தின் 143-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற முடியுமா?.

9. ஒரு சட்டம் அமலுக்கு வரும் முன்பு, கவர்னரும், ஜனாதிபதியும் அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்கீழ் எடுக்கும் முடிவுகள் கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா? மசோதா, சட்டம் ஆவதற்கு முன்பு, அதன் பொருள் குறித்து கோர்ட்டு விசாரிக்க அனுமதி உள்ளதா?.

10. ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் உத்தரவுகள் மற்றும் அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ் வேறுவகையில் பிறப்பிக்க முடியுமா?.

11. மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை கவர்னரின் ஒப்புதல் இல்லாமலே அமலுக்கு கொண்டுவர முடியுமா?.

12. அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது கட்டாயம் இல்லையா?.

13. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்துக்கு மட்டும் உட்பட்டதா? அல்லது அமலில் இருக்கும் அரசியல் சாசன நடைமுறைகளுக்கு முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?.

14. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான சச்சரவுகளை அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின்கீழ் சிறப்பு வழக்கு தொடுக்காமல், வேறு வகைகளில் தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்புக்கு அரசியல் சாசனம் தடையாக உள்ளதா?. மேற்கண்ட கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி இருந்தார்.

தமிழ்நாடு கவர்னர் தொடர்பான வழக்கில் மத்திய அரசு ஜனாதிபதி மூலமாக சுப்ரீ்ம் கோர்ட்டில் விளக்கம் கேட்பதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதற்கிடையே 14 கேள்விகளை ஜனாதிபதி எழுப்பிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துருக்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 22-ந் தேதி விசாரணை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த விவகாரம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து, சுப்ரீ்ம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு ஆணையிட்டு உள்ளது.

1 More update

Next Story