புதுச்சேரி அமைச்சர்களின் ஊழல்களுக்கு ஆதாரம் உள்ளது: நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சர்களின் ஊழல்களுக்கு ஆதாரம் உள்ளது என்று நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி அமைச்சர்களின் ஊழல்களுக்கு ஆதாரம் உள்ளது: நாராயணசாமி
Published on

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுக்கடுக்கான புகார்

புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அரசின் 300 நாள் சாதனைகளை வெளியிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் நாங்கள் எதையும் செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். இப்போது புதுச்சேரியில் பாலாறும், தேனாறும் ஓடுவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் கவர்னருக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் அவர்தான். முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதை தடுக்கிறார். புதுவை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். காவலர் பணிக்கான வயது வரம்பினை உயர்த்தும் கோப்பினை தேவையின்றி டெல்லிக்கு அனுப்பியுள்ளார் என்று கவர்னர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இப்போது நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறார்.

4 வழிச்சாலை

எங்கள் ஆட்சிக்காலத்திலும் சென்டாக் மூலம் மாணவர்களுக்கு முறையாக நிதியுதவி வழங்கப்பட்டது. காமராஜர் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. இவர்கள் திறப்பு விழாதான் செய்துள்ளார்கள். அரும்பார்த்தபுரம் மேம்பாலம் திறப்புவிழாவின்போது மத்திய மந்திரி நிதின் கட்காரி எனது கோரிக்கையை ஏற்று இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சிலை பகுதியில் மேம்பாலம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டார்.

விழுப்புரம்- புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்க காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் ஒப்புதல் பெறப்பட்டது. அந்த திட்டத்தில்தான் ஆரியபாளையத்தில் ரூ.60 கோடியில் மேம்பாலம், சாலை அமைக்கும் பணியும் வருகிறது.

பெஸ்ட் புதுச்சேரி

இந்த ஆட்சியாளர்களின் சாதனை முதியோர், மீனவர் உதவித் தொகைகளை உயர்த்தி கொடுத்தது ஒன்றுதான். மற்றவை எல்லாம் எங்கள் ஆட்சியில் வந்தவை. மத்திய அரசிடம் கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி கேட்டார்கள். அந்த நிதி வந்ததா? மழை நிவாரணம் ரூ.300 கோடி கேட்ட நிலையில் மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரிகள் புதுவை வந்து பேட்டி கொடுக்கின்றனர். ஆனால் என்ன நடந்தது? பிரதமர் அறிவித்த பெஸ்ட் புதுச்சேரி என்னவானது? நான் மாநில அந்தஸ்து, நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது தொடர்பாக பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி உள்ளிட்டவர்களை பலமுறை சந்தித்தேன். புதுவை முதல்-அமைச்சர் யாரை சந்தித்தார்? கடன் தள்ளுபடி என்னவானது?

விவாதிக்க தயார்

புதுவையில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது. குற்ற சம்பவங்களும் பெருகி வருகிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அலுவலகம் புரோக்கர் மயமாக காட்சியளிக்கிறது. ஊழல் பெருகி வருகிறது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அமைச்சர் லட்சுமிநாராயணனின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேடைபோட்டு விவாதிக்க தயார்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், பொதுச்செயலாளர்கள் சாமிநாதன், தனுசு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com