‘டிஜிட்டல் கைது’ என மிரட்டல்: 70 மணி நேர சித்ரவதையால் பெண் டாக்டருக்கு நேர்ந்த விபரீதம்

எதிர்முனையில் தோன்றிய நபர் பெங்களூரு நகர போலீசார் உடையில் இருந்தார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர், 76 வயது பெண் டாக்டர். இவர் அந்த பகுதியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் உறைவிட டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 5-ந்தேதி அவரது செல்போனுக்கு முன்பின் தெரியாத ஒரு எண்ணில் இருந்து வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு ஒன்று வந்தது.
அதை பெண் டாக்டர் எடுத்து பேசினார். எதிர்முனையில் தோன்றிய அந்த நபர் பெங்களூரு நகர போலீசார் உடையில் இருந்தார். போலீஸ் உடையில் தோன்றிய அவர், சுப்ரீம் கோர்ட்டு, அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் முத்திரையிட்ட ஆவணங்களை காட்டி, நீங்கள் ஒருவரை கடத்தியதாக புகார் வந்துள்ளது. அதன்பேரில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது டிஜிட்டல் முறையில் உங்களை கைது செய்துள்ளோம் என்றார்.
இதைக்கேட்டு பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பேசிய அந்த நபர், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் இந்த சிக்கலில் இருந்து நீங்கள் விடுபடலாம் என்றார். மறுநாள் மீண்டும் அவருக்கு அழைப்பு வந்தது. எனவே அவர் தனது ஓய்வூதிய வங்கிக்கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்தை, அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றினார். அந்த வங்கிக் கணக்கு மராட்டிய மாநிலத்தில் இருப்பதாக காட்டியது.
அத்தோடு பிரச்சினை முடிந்து விட்டது என்று நினைத்து இருந்த அவருக்கு, மீண்டும் வாட்ஸ் அப் வீடியோ கால் வந்தது. அப்போதும் டாக்டர் மிரட்டப்பட்டுள்ளார். சுமார் 70 மணி நேர சித்ரவதையால் பெண் டாக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.
அவர் இறந்த பின்னும் அவரது செல்போனுக்கு வீடியோ அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்து கொண்டே இருந்தது. கடைசியாக கடந்த 10-ந்தேதி காலையில் ‘காலை வணக்கம்’ என்ற குறுஞ்செய்தி வந்தது. இதுபற்றி அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் டாக்டரை மிரட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Heading
Content Area






