கற்பனை செய்ய முடியாத துயரம் - விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிறகு பிரதமர் மோடி பதிவு


கற்பனை செய்ய முடியாத துயரம் - விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிறகு பிரதமர் மோடி பதிவு
x

விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் நடக்கும் மீட்பு பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி மதியம் 1.39 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது. 230 பயணிகள், 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேருடன் புறப்பட்ட விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. 825 அடி உயரத்தை எட்டியபோது, அப்படியே கீழே தாழ்ந்து வந்து விமான நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி ஒன்றின் மீது விழுந்து வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லண்டனை சேர்ந்த ஒருவர் மட்டும் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், மருத்துவ விடுதியில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட இன்று குஜராத்தின் ஆமதாபாத்திற்கு வருகை தந்துள்ளார். ஆமதாபாத் விமான நிலையத்தில் பார்வையிட்ட பிரதமர் மோடி அதிகாரிகளுடன் பேசினார். விமான சேவைகள் வழக்கம் போல் செயல்படுவதாக பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கினர். பின்னர் விமானம் உருக்குலைந்து கிடக்கும் இடத்தில் நடக்கும் மீட்பு பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த நபரை மருத்துவமனைக்கு சென்று பார்த்த பிரதமர் மோடி அவரிடம் நலம் விசாரித்தார். இந்த நிலையில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிறகு பிரதமர் மோடி இது கற்பனை செய்ய முடியாத துயரம் என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஆமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நாம் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். திடீரென, இதயம் உடையும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். அவர்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் அந்த வெற்றிடம் வரும் பல ஆண்டுகளுக்கும் உணரப்படும் என்பதையும் அறிவோம். ஓம் சாந்தி.

இன்று ஆமதாபாத்தில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டேன். பேரழிவு நடந்த இடம் வருத்தமளிக்கிறது. அயராது மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மற்றும் குழுக்களைச் சந்தித்தோம். கற்பனை செய்ய முடியாத இந்த துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story