

புதுடெல்லி,
நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 28-ந் தேதி தொடங்கிய நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு 2026–27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.பொதுவாக விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை என்றாலும், இம்முறை 27 ஆண்டுகளுக்கு பின்னர் பிப்ரவரி 1-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.சுதந்திரத்துக்குப் பிறகு, பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் மாலை 5 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் மாலை 5 மணி என்பது லண்டனில் பகல் நேரமாக இருந்ததால், அவர்களது வசதிக்காக அந்த நேரத்தை கடைபிடித்தனர்.
கடந்த 1999-ம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா இந்த நேரத்தை மாற்றினார். அன்று முதல் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.பின்னர், கடந்த 2017-ம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்தினார். அப்போதிலிருந்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், நாளை சிறப்பு வர்த்தக நாளாக தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.) மற்றும் மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) அறிவித்துள்ளன.
2019-ம் ஆண்டு முதல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும்.இந்த பட்ஜெட்டில் முக்கிய சலுகைகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு ரெயிலில் பயணம் செய்யும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 40 சதவீத கட்டண சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 50 சதவீத கட்டண தள்ளுபடியையும் இந்தியன் ரெயில்வே வழங்கி வந்தது.
இந்த சலுகையால் ரெயில்வேக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,600 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை செலவானது. ஆனால், 2020-ல் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக ரெயில் சேவைகள் முடக்கப்பட்டபோது, நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த சலுகை நிறுத்தப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக அந்த சலுகை மீண்டும் வழங்கப்படவில்லை.பல்வேறு காலகட்டங்களில் இந்த சலுகை மீண்டும் கிடைக்குமா என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இதற்கான முக்கிய அறிவிப்புகள் வரலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.