மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீது நேற்று பேசிய ராகுல் காந்தி, “சீனாவின் ஆக்கிரமிப்பு” முயற்சிகளைப் பற்றி பேசினார். இதற்கு ஆதாரமாக முன்னாள் ராணுவ தளபதி நரவனேவின் புத்தகத்தை மேற்கோள்காட்டினார். ஆனால் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களும் ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுத்தனர்.இதனால் நேற்று அவை நடவடிக்கைகள் முடங்கின.

இந்த நிலையில், இன்றும் காலையில் இருந்தே மக்களவையில் கடும் அமளி நிலவி வருகிறது. அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு சாதகமாக இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

அதேபோல ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கும் எதிராக அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இன்று பிற்பகல் கூடியதும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் காகிதங்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தமிழக எம்.பி மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com