

புதுடெல்லி,
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து நேற்று பேசினார். இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் எரிசக்தி துறையில் நமது பாதுகாப்பு பறிபோய்விட்டது.
இந்தியாவின் நலன்களை நீங்கள் சமரசம் செய்துவிட்டீர்கள். நீங்கள் 'பாரத மாதா'வை விற்று விட்டீர்கள். பிரதமர் இதெல்லாம் பலனின்றி செய்ய மாட்டார். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது கழுத்தை நெறித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தை காணலாம் என கூறினார். நாட்டு மக்களின் வருங்காலம் சரணடைய செய்யப்பட்டு விட்டது என குற்றச்சாட்டாக கூறினார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு, அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக பயனற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும், அவை நடவடிக்கைகளுக்கான தெளிவான ஒழுங்குமுறை விதிகள் மற்றும் நன்னடத்தைகள் உள்ளன.
உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தீவிர குற்றச்சாட்டுகளை மற்றொரு உறுப்பினர் கூற விரும்பினால், அதற்காக நீங்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.
அவையில் விவரங்களை சுட்டி காட்டும்படி ராகுல் காந்தியிடம் நான் கேட்டு கொண்டேன். ஆனால், அவர் இந்தியா மற்றும் இந்தியர்களின் நலன்களை பிரதமர் விற்று விட்டார் என கூறுகிறார். எந்த அடிப்படையில்? இதனை அவர் கூறுகிறார். எந்தவித நோட்டீசும் கொடுக்காமல் ஹர்தீப் சிங் பூரிக்கு எதிராக தீவிர குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி பேசி முடித்ததும், மந்திரியின் பதிலுரையை கவனிக்காமல் உடனடியாக அவையை விட்டு வெளியேறி சென்று விட்டார். இது மரபு இல்லை என குறிப்பிட்ட ரிஜிஜு, ராகுல் காந்தி உள்நோக்கத்துடன் தெரிந்தே பொய் கூறுகிறார். மந்திரியின் பதிலுரையை கூட அவையில் அமர்ந்து அவர் கேட்கவில்லை. ஓடி விட்டார். அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்புவோம் என கூறினார்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் இன்று கூறும்போது, நாட்டில் ராகுல் காந்தியை விட மிக பெரிய பொய்யர் இல்லை. இந்தியாவில் உள்நாட்டு போரை தொடங்கி விட அவர் விரும்புகிறார். உண்மையின் கோவிலில் அவர் பொய் பேசுகிறார்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ், விவசாயிகள் ஒருபோதும் அநீதியை பெறமாட்டார்கள். இதற்கான உறுதியை எப்போது வேளாண் மந்திரி மற்றும் வர்த்தக மந்திரி அளித்து விட்டனரோ, நீங்கள் கூறுவது என்ன? யாருடைய அடிப்படையில் நீங்கள் தவறான தகவலை பரப்புகிறீர்கள்?
உங்களுடைய சீனா, கம்போடியா மற்றும் பரேலி பைல்கள் திறக்கப்படும்போது, நீங்கள் யாரென தெரிய வரும் என்றார். உங்களை நாட்டு மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். ஒருபோதும் நீங்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வரபோவதில்லை. உங்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.