விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சின் கோளாறு முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதா? - பரபரப்பு தகவல்கள்


ஆமதாபாத்தில் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆமதாபாத்,

இந்தியாவில் காந்தி பிறந்த மண்ணான குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி மதியம் 1.39 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது. 230 பயணிகள், 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேருடன் புறப்பட்ட விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. 825 அடி உயரத்தை எட்டியபோது, அப்படியே கீழே தாழ்ந்து வந்து விமான நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி ஒன்றின் மீது விழுந்து வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லண்டனை சேர்ந்த ஒருவர் மட்டும் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், மருத்துவ விடுதியில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள். 7 பேர் போர்ச்சுகல் நாட்டினர். கனடாவை சேர்ந்தவர் ஒருவர்.

தற்போது, விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணி நடக்கிறது. இந்த கருப்பு பெட்டி கிடைத்தால்தான் விமான விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றாலும், எஞ்சின் கோளாறு காரணமாகவே விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, டெல்லியில் இருந்து ஆமதாபாத் வந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஆமதாபாத்தை சேர்ந்த ஆகாஷ் வத்சா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, "ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 2 மணி நேரம் முன்தான் நான் அந்த விமானத்தில் பயணித்தேன். வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை. இதனை ஏர் இந்தியாவை 'டேக்' செய்து எக்ஸ் தளத்திலும் பகிர்ந்தேன்" என்று பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

பயணியின் இந்த குற்றச்சாட்டின் மூலம் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதாவது, எப்போதோ ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒருவராலே விமானத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதை உணர முடியும்போது, விமானத்தை இயக்கும் விமானியால் உணர முடியாதா?, இதுகுறித்து அவர் ஏர் இந்தியா தொழில்நுட்ப பிரிவிடம் புகார் அளித்தாரா?, பின்னர் இதே விமானம் ஆமதாபாத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டபோது முந்தைய விமானியே இயக்கினாரா?, அதுமட்டுமல்லாமல், பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்த புகாருக்கு ஏர் இந்தியா செவிசாய்க்கவில்லையா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம்தான் முறையான பதில் அளிக்க வேண்டும்.

1 More update

Next Story