

பஞ்ச்மஹால்,
குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் ஷேரா நகரில் பள்ளிக்கூடம் ஒன்றில் தேர்வு நேரத்தில் சரியான நேரத்திற்கு வராமல் காலதாமதத்துடன் வந்த பிளஸ் 2 மாணவனை ஆசிரியை நிறுத்தி கேள்வி கேட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த முகமது கான் அன்சாரி என்ற அந்த 18 வயது மாணவன், என்னை வீட்டிலேயே யாரும், எதுவும் கேட்பதில்லை. என்னை கேள்வி கேட்பதற்கு நீ யார்? என கேட்டதுடன், ஆசிரியையின் கன்னத்தில் அறைந்ததுடன், அவரை தள்ளி விட்டு விட்டு வகுப்பறையில் இருந்து தப்பி சென்று விட்டான்.
இந்த காட்சிகள் பள்ளியின் சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ வைரலானதும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, சம்பவம் பற்றி அறிந்து, மாணவனின் தந்தை அன்றே பள்ளிக்கு சென்று ஆசிரியை மற்றும் பள்ளி முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
எனினும், சில நாட்கள் கழித்து, தந்தை மற்றும் 15, 20 பேருடன் அந்த மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளான். ஆசிரியையிடம் நீங்கள் தனியாக நகரில் வசிக்கிறீர்கள் என கூறியதுடன் அவருக்கு மிரட்டலும் விடுத்திருக்கிறான்.
ஆனால் அவனிடம் விசாரித்தபோது, ஆசிரியை மற்றும் பள்ளி ஊழியரிடம் மன்னிப்பு கேட்கவே நிறைய பேரை அழைத்து சென்றேன் என மாணவன் கூறினான்.
சி.சி.டி.வி. வீடியோ வைரலான நிலையில், மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த மாணவனை பிடித்த போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் நடத்தியபடி கூட்டி சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.