ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட மனைவி; எதிர்த்த கணவன்... அடுத்து நடந்த சோகம்

அமன் பல முறை கூறியும் அதனை மனைவி கண்டு கொள்ளவில்லை.
புதுடெல்லி,
டெல்லியின் நஜப்கார் பகுதியை சேர்ந்தவர் அமன் (வயது 35). இ-ரிக்சா ஓட்டுநர். 9 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர். பழைய ரோஷன்புரா பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், இவருடைய மனைவி ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருக்கிறார்.
இது கணவர் அமனுக்கு பிடிக்கவில்லை. பல முறை கூறியும் அதனை மனைவி கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், இன்று அதிகாலை 4.23 மணியளவில் நஜப்கார் காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், மனைவியை அமன் கொலை செய்த சம்பவம் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, முதல்கட்ட விசாரணையில், மனைவி ரீல்ஸ் எடுப்பதற்கு அமன் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். ஆனால், அவரோ தொடர்ந்து சமூக ஊடகங்களில் ரீல்சுகளை வெளியிட்டு வந்திருக்கிறார். அவருக்கு 6 ஆயிரம் பின்தொடர்வோர் உள்ளனர் என்றும் கணவரிடம் பெருமையுடன் கூறியுள்ளார்.
ஆனால், இது தொடர்பாக அந்த தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இன்று அதிகாலையும் இதுபோன்று வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறில் முடிந்தது. மனைவியை கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர், தூக்கு போட்டும், விஷம் குடித்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆனால், அதற்குள் போலீசார் வந்து அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.






