சிறப்பு ரெயிலில் சென்றபோது பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது: 2 குழந்தைகளும் சில மணி நேரத்திலேயே உயிரிழந்ததால் சோகம்

சிறப்பு ரெயிலில் சென்றபோது ரெயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த 2 குழந்தைகளும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
சிறப்பு ரெயிலில் சென்றபோது பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது: 2 குழந்தைகளும் சில மணி நேரத்திலேயே உயிரிழந்ததால் சோகம்
Published on

லக்னோ,

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், வேலையிழந்து பிற மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிக்கி தவித்து வந்தனர். அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு நேற்று முன்தினம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதில் ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்தனர்.

இந்த சிறப்பு ரெயிலில் காயத்ரி என்ற 8 மாத கர்ப்பிணி பெண்ணும், தனது கணவருடன் பயணித்தார். ரெயில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிரத்து ரெயில் நிலையம் வருவதற்கு முன்பு அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதுபற்றி ரெயில்வே ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த ரெயில் சிரத்து ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்து கர்ப்பிணி பெண்ணும், அவருடைய கணவரும் கீழே இறங்கினர். அப்போது ரெயில் நிலையத்திலேயே அந்த பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சென்ற சில மணி நேரத்திலேயே 2 குழந்தைகளும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. 8 மாதத்தில் குழந்தைகள் பிறந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஊரடங்கால் அனுபவித்த துன்பங்களை மறந்து, சந்தோஷமாக சொந்த ஊருக்கு செல்லும் வழியில், இரட்டை குழந்தைகள் பிறந்து உயிரிழந்ததை எண்ணி அந்த பெண்ணின் கணவர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com