நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முன்னோடிகளாக திகழ்கின்றனர் பிரதமர் மோடி புகழாரம்

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மன் கீ பாத்(மனதின் குரல்) என்னும் தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார்.
நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முன்னோடிகளாக திகழ்கின்றனர் பிரதமர் மோடி புகழாரம்
Published on

புதுடெல்லி,

2018-ம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையான நேற்று பேசியபோது அவர் இந்திய பெண்கள் புரிந்த சாதனைகள் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அப்போது அவர் பத்ம விருதுகள் பற்றியும் விரிவாக பேசினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:-

இந்த ஆண்டு பத்ம விருதுகள் பெற்றவர்கள் குறித்து நீங்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். தற்போது பத்ம விருதுகள் வழங்குவதில் மிகப்பெரிய அளவில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டு உள்ளது. சிறந்த சேவை ஆற்றுபவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யாருடைய சிபாரிசும் தேவையில்லை. பெரிய நகரங்களில் சேவை செய்தவர்கள் என்றில்லாமல், சமுதாயத்தின் மாற்றத்துக்கு பாடுபடுபவர்களும் பத்ம விருதுகளுக்கு தேர்வாகி உள்ளனர்.

கேரளாவின் கல்லார் பகுதியைச் சேர்ந்த லட்சுமிகுட்டி ஒரு ஆசிரியை. அவர் அடர்ந்த காட்டுக்குள் ஒரு ஓலைக்குடிசையில்தான் வசித்து வருகிறார். தனது நினைவில் வைத்துள்ள மூலிகை மருத்துவ குறிப்புகள் மூலம் அவர் 500 விதமான மூலிகை மருந்துகளை தயாரித்து வருகிறார். அவரும் பத்ம விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். இந்த ஆண்டு பத்ம விருதுகள் பெற்றவர்களில் பலர் வெளியுலகின் பார்வைக்கு தெரியாத, திறமையாளர்கள் ஆவர்.

சரியான சிகிச்சை கிடைக்காததால் தனது 23-வது வயதில் கணவரை இழந்த மேற்கு வங்காள மாநிலத்தின் 75 வயது சுபாஷினி மிஸ்திரி ஏழைகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்க ஒரு மருத்துவமனை கட்டுவேன் என்று சபதம் எடுத்தார். இதற்காக அவர் பலருடைய வீடுகளில் பண்ட பாத்திரங்களை கழுவி சம்பாதித்தார்.

காய்கறி விற்று பணம் சேர்த்தார். அந்த சேமிப்பு மூலம் ஒரு மருத்துவமனையையும் கட்டினார். இன்று அவருடைய மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு சுபாஷினியும் ஒரு உதாரணம். அவரும் இந்த ஆண்டு பத்ம விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.

இன்று நாம் பெண்களை பாதுகாப்போம், படிக்க வைப்போம் என்பதை முழக்கமாக வைத்துள்ளோம். ஆனால், பெண்களை போற்றும் விதமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கந்த புராணத்தில் ஒரு பெண் என்பவள் 10 ஆண் மகன்களுக்கு இணையான மதிப்பு கொண்டவர் என்று கூறப்பட்டு உள்ளது.

நமது நாடு மற்றும் சமுதாயத்தின் ஆக்கப்பூர்வமான மாற்றத்துக்காக பெண்கள் பெரும் பங்காற்றி வருவது கண்கூடு. அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னோடிகளாகவும் திகழ்கின்றனர், திகழ்ந்தும் வருகின்றனர். அத்தகையவர்களில் நிர்மலா சீதாராமன்(ராணுவ மந்திரி), ராணி லட்சுமிபாய், அக்கா மகாதேவி, வேத இலக்கிய தத்துவ ஞானிகள் கார்கி, மைத்ரேயி ஆகியோரை குறிப்பிடலாம்.

பெண்கள் இன்று நாட்டின் சமுதாய முன்னேற்றத்துக்காக பெரிதும் உழைத்து வருகிறார்கள். பிப்ரவரி 1-ந்தேதி அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவு தினம். அவர் கொலம்பியா விண்கலத்தில் சென்றபோது விபத்துக்கு உள்ளானார். அவர் தனது உயிரை இழந்தபோதிலும், உலகம் முழுவதும் பல கோடி இளைய தலைமுறையினருக்கு உத்வேக உணர்வை அளித்துள்ளார். அவர் மட்டுமின்றி பெண்களில் பலர் இன்று அரிய சாதனை படைத்தும் வருகின்றனர்.

மாவோயிஸ்டுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஷ்கார் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் பழங்குடியின பெண்கள் மின்சார சைக்கிள் ரிக்ஷாக்களை இயக்கி வருகின்றனர். சுய நம்பிக்கை கொண்டு சுய தொழில் மூலம் அப்பகுதியில் அடையாளத்தையே அவர்கள் மாற்றியுள்ளனர்.

அண்மையில் நடந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில், இந்திய எல்லைப்படையில் பணியாற்றி வரும் வீராங்கனைகள் மோட்டார் சைக்கிளில் வீர தீர செயல்களை செய்து காண்பித்து வியக்க வைத்தனர்.

மும்பை மாதுங்கா ரெயில் நிலையம் நாட்டிலேயே முற்றிலும் பெண்களே பணிபுரியம் நிலையமாக மாறி உள்ளது. அதனால் பல்வேறு துறைகளில் உலக அளவில் சாதனை படைத்திட்ட இந்திய பெண்களை அண்மையில் ஜனாதிபதி நேரில் அழைத்து வாழ்த்தினார். ஏனெனில் பெண்களுக்கு மரியாதை அளிப்பது நமது கலாசாரத்தின் ஒரு அங்கம்.

நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் பெண்களுக்கு எனது வீர வணக்கங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com