

புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து மாநிலங்களவையில் பதிலளித்து பேசி கொண்டிருக்கும்போது, சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. ஜெயா பச்சன் குறுக்கிட்டு பேசினார்.
அப்போது அவர், மத்திய மந்திரியை நோக்கி நீங்கள் மிக நல்ல பதில்களை எல்லாம் தந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு பெரிய கதை சொல்லியாக இருக்கிறீர்கள். எங்களுக்கு பெரிய பொழுதுபோக்காக உள்ளது. நான் பேச வந்தது பொழுதுபோக்கு துறையையும், டிக்கெட் விலையையும் பற்றி என குறிப்பிட்டார்.
எங்கள் துறையிலேயே அதிக வரி செலுத்துபவர்களாக நாங்கள் இருக்கிறோம் என திரையரங்கு கட்டணம் பற்றி குறிப்பிட்டு பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், அவர் குறிப்பிட்டு எழுப்பிய கேள்வியானது, திரை துறையின் டிக்கெட் விலையை பற்றியது. உயர்ந்து நிற்கும் டிக்கெட் விலையால் அந்த துறை அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பொழுதுபோக்கு வரியை நான் ஒப்பு கொள்கிறேன்.
ஆனால், டிக்கெட் கட்டணம் என்பது மாநிலம் சார்ந்தது. அதனை பற்றி என்னிடம் கேட்பதில் அர்த்தம் இல்லை என கூறினார்.
திரை துறைக்கு 2026-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஏதேனும் கூறப்பட்டு உள்ளனவா? என்ற ஜெயா பச்சன் எம்.பி.யின் கேள்விக்கு மத்திய மந்திரி பதிலளித்தபோது இதனை கூறினார்.
எனினும், அனிமேஷன், விசுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட விசயங்களுக்கு பட்ஜெட் ஆதரவு அளிக்கிறது என கூறினார். ஏனெனில், அது வளர்ச்சிக்கான இயந்திரம் என்றார். நாடு முழுவதும் டிஜிட்டல் ஊடக உள்ளடக்கங்களை உருவாக்க 1,500 பள்ளிகளில் ஆய்வகங்கள் நிறுவப்படும். 2030-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் தொழில் வல்லுநர்கள் அதில் உருவாவார்கள் என்றார்.