கமல்ஹாசன் வந்து காப்பாற்ற வேண்டிய நிலை தமிழக அரசியலில் இல்லை

நடிகர் கமல்ஹாசன் வந்து காப்பாற்ற வேண்டிய நிலை, தமிழக அரசியலில் இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Published on

விருதுநகர்,

விருதுநகரில் மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் கமல்ஹாசன் 50 ஆண்டுகளுக்கு மேல் கலைத்துறையில் இருந்து வருகிறார். அரசியலில் தமிழகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. திரைப்படத்தில் எல்லாம் நடித்து முடித்துவிட்டு சும்மா இருக்கும் போது அரசியலுக்கு வருவதாக அவர் கூறுகிறார். இதுவரை சமுதாய அக்கறையோ, மக்கள் மீது அக்கறையோ அவர் காட்டியது இல்லை.

அரசியலுக்கு வருவது என்றால் கொள்கை நிலைப்பாட்டோடு வர வேண்டும். கமல்ஹாசன் வந்து காப்பாற்ற வேண்டிய நிலையில் தமிழக அரசியல் இல்லை. அதற்கு பல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. அவர் கொள்கை நிலைப்பாட்டுடன் அரசியலுக்கு வர வேண்டும் என்று தான் சொல்கிறோம்.

அமைச்சர்கள் தற்போது தான் பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள். அமைச்சர்கள் ஜெயலலிதா இருக்கும் வரை அவரது கட்டுப்பாட்டில் இருந்தார்கள். அதனால் தான் அவர்கள் பேசவில்லை. ஆனால் கமல்ஹாசன் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. கமல்ஹாசன் கையையோ, காலையோ யாரும் கட்டிப்போடவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். எல்லா கட்சிகளிலும் தான் ஊழல் இருக்கிறது. கமல்ஹாசன் இந்தி திணிப்பின் போதே அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறுகிறார். அப்படி என்றால் ஏன் அதற்கு பிறகு இந்தி படங்களில் நடித்தார்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை (இன்று) ராமேசுவரத்தில் பிரதமர் திறந்து வைக்க உள்ள அப்துல்கலாம் மணிமண்டப விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் விருதுநகர் அனுமான் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அவருடன் மாநில நிர்வாகிகள் தேசிய விநாயகம், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com