ஊத்துக்கோட்டை,
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள நாராயணவனம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேசன்(வயது 33) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளனர் ரங்கய்யா(50) உடன் இருந்தார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் ஊத்துக்கோட்டை ரெட்டித்தெருவில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த காம்பவுண்டு சுவரை இடித்து தள்ளி விட்டு உள்ளே புகுந்து அங்கிருந்த வீட்டின் படிக்கட்டில் மோதி நின்று விட்டது.
7 பேர் உயிர் தப்பினர்
படிக்கட்டில் லாரி மோதிய போது பயங்கர சத்தம் கேட்டதால், வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த சென்டிரிங் வேலை செய்யும் செல்வம் (50), அவருடைய மனைவி மஞ்சுளா (36) உள்பட 7 பேரும் திடுக்கிட்டு எழுந்து வெளியே ஓடி வந்து பார்த்தனர். நல்லவேளையாக தாறுமாறாக ஓடி வந்த லாரி படிக்கட்டில் மோதி நின்று விட்டதால் வீட்டுக்குள் படுத்து தூங்கிய 7 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். வீட்டுக்குள் லாரி புகுந்து இருந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்கும்.
சேதம்
இந்த சம்பவத்தில் லாரியின் முன் பகுதி நொறுங்கியது. வீட்டின் முன் இருந்த காம்பவுண்டு சுவர், குடிசையும் சேதம் அடைந்தது. மேலும் செல்வம் வீட்டின் எதிரே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது.
லாரி டிரைவர் மற்றும் கிளனருக்கு காயங்கள் ஏற்பட்டன. இருவரும் ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.