கோத்தகிரி அருகே நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா? வருவாய்த்துறையினர் ஆய்வு

கோத்தகிரி அருகே ஓரசோலை காமராஜர் நகரில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்று வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே ஓரசோலை காமராஜர் நகரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்டோருக்கு தலா 1 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தை பெற்ற பெரும்பாலானோர் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை காட்டிலும், மேலும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் 3 வீடுகளுக்கு செல்லும் நடைபாதையை முன்புறம் உள்ள வீட்டின் உரிமையாளர் தடுத்து விட்டதாலும், மற்றவர்களை அந்த நடைபாதையில் செல்ல அனுமதிக்காததாலும் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து இருதரப்பினரும் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சிவில் சம்பந்தமான பிரச்சினைகளை வருவாய்த்துறை மூலம் தீர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதால், அவர்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து கோத்தகிரி தாசில்தார் மோகனா, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியம் மற்றும் நில அளவையர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பிரச்சினைக்குரிய நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதா என நில அளவை மேற்கொண்டு ஆய்வு செய்தனர். இது சம்பந்தமான அறிக்கை குன்னூர் சப்-கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஓரிரு நாட்களுக்குள் சப்-கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com