வாழப்பாடி அருகே அ.ம.மு.க. நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

வாழப்பாடி அருகே சிங்கி புரம் கிராமத்தில் அ.ம.மு.க. நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம், பொருள் ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் திரும்பி சென்றனர்.
Published on

வாழப்பாடி,

வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 50). கட்டிட ஒப்பந்ததாரரான இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வாழப்பாடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் பணத்தை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு கொடுப்பதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 14-ந் தேதி மாலை வீரமுத்து வீட்டிற்கு அடுத்தடுத்து சென்ற பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பணம், பொருள் மற்றும் ஆவணங்கள் கிடைக்காததால் அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இதே கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் அ.ம.மு.க.வில் எம்.ஜி.ஆர். மன்ற சேலம் மாவட்ட இணைச்செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் விஜயன் வீட்டுக்கு சென்ற தேர்தல் பணிக்கான சிறப்பு வருமான வரி அலுவலர்கள், வீடு, மாட்டு கொட்டகை, டிராக்டர் செட், வைக்கோல் குவியல் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இவரது வீட்டிலும் பணம், பொருள், ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இதனிடையே ஒரு கிராமத்திலுள்ள அ.ம.மு.க. கட்சி நிர்வாகிகள் இருவரை மட்டும் குறிவைத்து, தொடர்ந்து புகார் தெரிவித்து, அதிகாரிகளை அலைகழிப்புக்குள்ளாகி வருபவர்கள் குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com