நெல்லை நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து வசதிகளும் தயார் - 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

நெல்லை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு ஓட்டு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் உள்ளது.
Published on

நெல்லை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் அமர்ந்து வாக்கு எண்ணிக்கையை பார்வையிட தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு வளைவுகளும், பேரிகாட்களும், தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு வருகின்ற அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், முகவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாநகராட்சி சார்பில் நடமாடும் கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை விவரத்தை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுகின்ற ஊழியர்கள் காலை 6.30 மணிக்குள் வரவேண்டும். ஊழியர்களை போலீசார் அடையாள அட்டையை வைத்து சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிப்பார்கள். மேலும் வேட்பாளர்கள், முகவர்களும் அடையாள அட்டையை வைத்து சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் செல்வதற்காக தனியாக பேரிகாட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளர் தனக்கு தேவையான வாக்கு எண்ணும் முகவரை நியமனம் செய்யலாம். மேஜைக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் 14 மேஜைகளுக்கு தலா ஒரு நபர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு ஒரு நபர் வீதம் மொத்தம் 15 நபர்களை ஒரு சட்டமன்ற தொகுதிக்கு நியமனம் செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் முகவர்கள், பிற மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் முகவர்கள், பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி முகவர்கள், சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்களுக்கு இருக்கை ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

ஒவ்வொரு முகவரும் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரால் பிறப்பிக்கப்படும் உத்திரவினை பின்பற்ற வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் ஒழுக்கத்தினை கடைபிடிக்க வேண்டும். ஒழுங்கீனமாக செயல்படும் முகவர்களை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேற்ற தேர்தல் அலுவலருக்கு ழுழு உரிமை உண்டு.

தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு இரண்டு மேஜைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி இரண்டு மேஜைகளுக்கும் இரண்டு முகவர்களை நியமனம் செய்து கொள்ளலாம். அரசு ஊழியரை முகவராக நியமிக்கக்கூடாது என்று விதியில் கூறப்பட்டு உள்ளது.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் 22 சுற்றும், நெல்லை சட்டசபை தொகுதியில் 22 சுற்றும், அம்பை சட்டசபை தொகுதியில் 21 சுற்றும், பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் 19.1 சுற்றும், நாங்குநேரி சட்டசபை தொகுதியில் 21.4 சுற்றும், ராதாபுரம் சட்டசபை தொகுதியில் 21.9 சுற்றும் நடைபெறும். இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு இன்ஸ்பெக்டரும், 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு உதவி கமிஷனரும் பொறுப்புகளை கவனிப்பார். இங்கு மொத்தம் 1054 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் நடக்கிறது. அங்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணிக்கை மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் 18.6 சுற்றும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் 20.1 சுற்றும், சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் 19.6 சுற்றும், வாசுதேவநல்லூர் சட்டசபை தொகுதியில் 19.4 சுற்றும், கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் 23.2 சுற்றும், தென்காசி சட்டசபை தொகுதியில் 23.3 சுற்றும் நடைபெறும். இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு இன்ஸ்பெக்டரும், 3 சட்டசபை தொகுதிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டும் பொறுப்புகளை கவனிப்பார். இங்கு மொத்தம் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com