மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.55 குறைந்தது

மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.55 குறைந்தது.
Published on

சென்னை,

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கான மானியம் நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14.2 கிலோ எடையுடைய மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.714 ஆகவும், மும்பையில் ரூ.665 ஆகவும் இருந்தது. இது கடந்த ஜனவரி மாதம் மும்பையில் ரூ.19.50 உயர்ந்து ரூ.684.50 ஆகவும், சென்னையில் ரூ.20 உயர்ந்து ரூ.734-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மாதம் (பிப்ரவரி) மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிகரித்தது. மும்பையில் ரூ.145 உயர்ந்து ரூ.829.50 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்ந்து ரூ.881 ஆகவும் விற்கப்பட்டது. கியாஸ் சிலிண்டர் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது, இது இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை நேற்று குறைந்தது.

அதன்படி சென்னையில் ரூ.55 குறைந்து ரூ.826-க்கும் டெல்லியில் ரூ.53.50 குறைந்து ரூ.805 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.56.50 குறைந்து ரூ.839.50 ஆகவும், மும்பையில் ரூ.53.50 குறைந்து ரூ.776-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com