

சென்னை,
திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். 2016-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் இந்தக் கட்சி, அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து நடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58 ஆக உயர்ந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8.2 ஆக அதிகரித்தது.
மாநில கட்சி அந்தஸ்து
தேர்தலில் ஒரு அரசியல் கட்சி 8 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றால் மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் நடைமுறை உள்ளது. அந்த வகையில், கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில், அதாவது கடந்த ஆண்டு (2025) ஜனவரி 10-ந் தேதி நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தது. இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்ள இருக்கிறது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
திருச்சியில் மாநாடு
ஒரு சில கட்சிகள் நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு இழுக்க முயற்சி மேற்கொண்டாலும், அது நடக்கவில்லை. மற்ற கட்சிகள் எல்லாம் அரசியலில் ஒரே பாதையில் நடைபோட, சீமான் சற்று வித்தியாசமான அரசியலையே கையாண்டு வருகிறார். கடந்த ஆண்டு கடல் மாநாடு, மாடு மாநாடு, மலை மாநாடு, தண்ணீர் மாநாடு என்று அடுத்தடுத்து நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில், திருச்சியில் இம்மாதம் 21-ந் தேதி (சனிக்கிழமை) நாம் தமிழர் கட்சி சார்பில் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - 2026" நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் களம் காணப்போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.
பெண்களுக்கு 50 சதவீதம் வாய்ப்பு
வழக்கமாக, நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கும் முக்கியத்தும் கொடுக்கும் வகையில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், வரும் தேர்தலிலும் 117 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட இருக்கின்றன. மேலும், இந்த முறை மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2016-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலில் மட்டும் போட்டியிட்டு வருகிறார். முதல் தேர்தலில் கடலூர் தொகுதியிலும், 2-வது தேர்தலில் (2021) திருவொற்றியூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். திருவொற்றியூர் தொகுதியில் 3-வது இடம்பிடித்த அவர், 24.3 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.
சீமான் எங்கு போட்டி?
இந்த முறை எந்த தொகுதியில் சீமான் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த சீமான், "இன்னும் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு 20 நாட்கள் தானே இருக்கிறது. அப்போது தெரியும்" என கூறினார். இந்த முறை சீமான், காரைக்குடி தொகுதியில் களம் காண்வார் என தெரிகிறது.