தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகல்: பா.ஜ.க. மேலிடம் மீது அதிருப்தி காரணமா?

சமீபத்தில், அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிலும் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை.
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகல்: பா.ஜ.க. மேலிடம் மீது அதிருப்தி காரணமா?
Published on

சென்னை,

கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்த அண்ணாமலை, கடந்த 2020-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. போட்டியிட்டது. ஆனால், தேர்தலில் இந்தக் கூட்டணி தோல்வியடைந்தது.

அண்ணாமலை நியமனம்

"சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம்" என அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கூறினார்கள். மேலும், "சிறுபான்மையினர் வாக்குகளும் கிடைக்காமல் போனதால்தான் நாங்களும் தோல்வியடைந்தோம்" என்று பகிரங்கமாக அவர்கள் பொது வெளியில் தெரிவித்தனர்.

இந்த நேரத்தில்தான், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அதாவது, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் பொறுப்பேற்றார். ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த இவர், அ.தி.மு.க. நிர்வாகிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கத் தொடங்கினார். ஒரே கூட்டணிக்குள் இவ்வாறு மோதல் ஏற்பட்டதால் அரசியல் களத்தில் சூடு பறந்தது.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகல்

ஒரு கட்டத்தில், அ.தி.மு.க. தலைமை மீதும், ஜெயலலிதா குறித்தும் எதிரான கருத்துகளை அண்ணாமலை தெரிவித்ததால், கூட்டணியை விட்டு வெளியேற அ.தி.மு.க. முடிவு செய்தது. அதன்படி, 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியது.

அதன்பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அதிரடியாக அறிவித்தார்.

அ.தி.மு.க.வுக்கு தூது

இந்த நிலையில்தான் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது, அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் என்று தி.மு.க.வினர் பேசி வந்தனர். ஆனால், அதை அ.தி.மு.க. மறுத்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை.

தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. - பா.ஜ.க.வுக்கு எதிராக அமைந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஒரு ஆண்டுக்கு முன்பே பா.ஜ.க. வியூகம் வகுக்க தொடங்கியது. மீண்டும் கூட்டணி சேர அ.தி.மு.க.வுக்கு தூதுவிட்டது.

நயினார் நாகேந்திரன் தேர்வு

இதனால், மனமாற்றம் அடைந்த அ.தி.மு.க. தலைமை, கூட்டணியில் இணைய ஒரேயொரு கோரிக்கையை முன்னிறுத்தியது. அதாவது, பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.

அந்த நேரத்தில், பா.ஜ.க. மாநில தலைவராக பதவியேற்று அண்ணாமலைக்கும் 3 ஆண்டுகள் ஆனதால், அதைக் காரணம் காட்டி, கட்சி தலைமை தேர்தலை அறிவித்தது.

தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந் தேதி அவர் பதவியேற்றார். அதன் பிறகே, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்தது.

அண்ணாமலை அதிருப்தி?

ஆனால், அண்ணாமலையின் ஆதரவாளர்களோ, தமிழகத்தில் பா.ஜ.க. இந்த அளவுக்கு வளர்ச்சியடைய காரணமாக இருந்த அண்ணாமலையை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தேசிய தலைமையில் அவருக்கு பதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், தேசிய அளவில் முக்கிய பொறுப்பு எதுவும் அண்ணாமலைக்கு வழங்கப்படவில்லை. இதனால், அவர் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர்களை டெல்லி தலைமை அழைத்தபோதும் இவர் மட்டும் செல்லவில்லை. நிறைய திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்ததால் போக முடியவில்லை என்று அதற்கு காரணமாக அண்ணாமலை கூறினார்.

சமரச முயற்சி

சமீபத்தில், அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிலும் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை. இந்த நிலையில்தான், விருகம்பாக்கம், மதுரை தெற்கு, காரைக்குடி, சிங்காநல்லூர் உள்பட 6 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

"மாநில தலைவராக இருந்து தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்தவருக்கு 6 தொகுதிகளுக்கான பொறுப்புதானா?" என்று அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கொதிப்படைந்தனர். இந்த நிலையில்தான், தந்தையின் உடல்நலனை காரணம் காட்டி, பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்துள்ள டெல்லி பா.ஜ.க. தலைமை அவரை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com