

சேலம்,
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அக்கட்சியின் பிரச்சார குழு மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜூன், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, ஆதவ் அர்ஜூன் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க.-காங்கிரஸ் இடையே ஒரு சமூகமான உறவு இல்லை என்பதை அவர்களது தலைவர்கள் பேசுவதை காணமுடிகிறது.
தி.மு.க. தனித்து நின்றால் வெறும் 22 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைக்கும். இதனால் அவர்கள் கூட்டணி கட்சிகளை நம்பி இருக்கிறார்கள். ஆனால் த.வெ.க.வுக்கு தற்போதை கணக்குப்படி பார்த்தால் 27 சதவீதம் வாக்கு சதவீதம் இருப்பதாக கூறப்படுகிறது. இது முதல்-அமைச்சருக்கும் நன்றாக தெரியும். விஜய் அரசியல் வருகையதால் த.வெ.க.வுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
இதனால் நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகி வருகிறோம். அதேபோல், எவ்வித கூட்டணி இல்லாமல் தி.மு.க., அ.தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா?. ஏனென்றால் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்கள் இருந்தபோது அரசியல் வேறு, தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை வேறு. அவர்களின் மறைவுக்கு பிறகு ஆளுமை, திறமையான தலைவர்கள் இல்லை. த.வெ.க.வுடன் காங்கிரஸ் சேருமா? என்பதை கருத்து எதுவும் சொல்லமுடியாது. முதலில் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிக்கட்டும். அதன்பிறகு பார்க்கலாம், என்றார்.