

சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், திமுக 173, காங்கிரஸ் 25, மதிமுக 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, இந்திய கம்யூனிஸ்டு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதி தமிழர் பேரவை 1 என 234 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்றுள்ள கட்சிகள் தொடர்வதுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் புதிதாக இணைந்துள்ளது.
எனவே, கடந்த முறை போலவே இந்த முறையும் கூட்டணி கட்சிகளுக்கு அதே தொகுதிகளை ஒதுக்கவும், மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகளை கொடுத்துவிட்டு, மீதமுள்ள 170 தொகுதிகளில் தி.மு.க. களம் இறங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், அதாவது கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு வருகின்றன. தேசிய கட்சியான காங்கிரஸ் 41 தொகுதிகள் உள்பட ஆட்சியிலும் பங்கு கோரி வருகிறது.
இதுபோன்ற நெருக்கடியான நிலையில்தான் திமுக கூட்டணியில் வரும் 22-ந் தேதி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தனி அறை தயார் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தி.மு.க.வில் இன்னும் குழு அமைக்கப்படவில்லை. ஒரு சில நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த (2021) சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீட்டு குழுவில், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, க.பொன்முடி மற்றும் ஆ.ராசா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இந்த முறை குழுவில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஒரு சிலர் நீக்கப்பட்டு, புதிதாக சிலரை சேர்க்க வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் வரும் 22-ந் தேதி தொடங்கும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை மார்ச் 8-ந் தேதிக்குள் முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதற்குள் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால், அதன்பிறகு தி.மு.க. கூட்டணி கட்சிகள் வேட்பாளர் தேர்வையும் விரைவாக முடிக்க வாய்ப்பாக இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருதுகிறாராம்.
இந்த முறை, தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க தேசிய அளவிலான காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வருவதாக தெரிகிறது.
அதேபோல், தி.மு.க. கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடைய மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தனித்தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எம்.பி.யும் இந்த முறை பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறாராம்.